Thursday 24 December 2015

வைகுண்ட எகாதசி

 ‪#‎ரங்கா‬ #ரங்கா

மார்கழி மாதம் என்பது தேவர்களின் விடியற்காலை பொழுது. மார்கழி மாதத்தில் குருவின் வீடான தனுசு ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் தெய்வசிந்தனை அதிகரிக்கும் மாதம். 

மார்கழியில் வரும் சுக்லபட்ச ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்தது. இதனை மோட்ச எகாதசி, பெரிய ஏகாதசி என்பர். பக்தி சிரத்தையுடன் ஏகாதசி விரதமிருந்து பகவானை நினைத்து வழிபடுவோர் வைகுண்டம் செல்வர். அவர்களது மூதாதையரும் முக்தி பெறுவார்கள். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணைந்திருக்கின்றன. 


11-வது நாள் ஏகாதசியன்று சந்திரன் சூரியனிலிருந்து 132 டிகிரி பின்னால் இருக்கிறது. இந்த நாட்களில் புவிஈர்ப்பு சக்தி அதிகமாகிறது. இதன் காரணமாக அந்த சமயத்தில் எப்பொழுதும் போல உணவு ஜீரணமாகாது. ஏகாதசி அன்று விரதமிருந்தால், முன் 10 நாட்கள் உண்ட உணவால் உடலில் சேர்ந்துள்ள கழிவுப்பொருட்கள் கரைந்து வெளியேறுகின்றன. 


11-வது நாளான ஏகாதசி அன்று வயிறு சுத்தமாகிறது. அன்று ஜீரண உறுப்புகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. அதே சமயம் வைகுண்ட ஏகாதசியில் இறைச்சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும் என்பது விதி. மனதில் பூரணமாக இறைச் சிந்தனை நிலைநிறுத்த வேண்டுமென்பதே உபவாசம் என்பது. மனது சுத்தமாகி மனம் அமைதியாகி மனநலமும் பெறலாம். 


திருவாய்மொழிக்கு, வேதத்திற்கு சமமான ஏற்றம் கொடுத்து ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழியைப் பாராயணம் பண்ணவும், அத்திருவாய்மொழிக்கென விழா எடுக்கவும் ராமானுஜர் ஏற்பாடு செய்து திவ்ய தேசங்களில் வேத ஒலிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை தமிழ் பாசுரங்களுக்கு உண்டாக செய்தார். 


இதற்கு அத்யயனோத்ஸவம் என்று பெயர். மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை திதி முதல் தசமி திதி முடிய பத்து நாள் விழா பகல் பத்து, இதில் திருப்பல்லாண்டு முதலாயிரம், கண்ணி நுண்சிறுத் திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுங்தாண்டகம் ஆகிய 2 ஆயிரம் பாசுரம் இசைக்கப்படும். 


தசமிக்கு மறுநாளான வளர்பிறையில் ஏகாதசி திதி முதல் தேய்பிறையின் பஞ்சமி திதி முடிய 10 நாள் விழாவுக்கு ராப்பத்து என்று பெயர். இதில் திருவாய்மொழி ஆயிரம் பாசுரம் இயற்பா ஆயிரமும் இசைக்கப்படும். நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் பாடல்களை எம்பிரானே இனிமையுடன் கேட்பதால் தாளத்தோடு இசைக்க இசைவல்லவரான அரையர்களையும் ராமானுஜர் நியமனம் செய்தார். 


இதனை அரையர் சேவை என்பார்கள். மார்கழி மாதத்தில் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை தாளஜதி சேர்ந்த இன்னிசையுடன் இசைப்பது, கேட்பது 12 வருடம் செய்த பூஜாபலனுக்கு உரியதாகும். முடியாதவர்கள் திருப்பாவை பாடலையும் பாடி மனதார வணங்கலாம். 


ஆசைகளின்றி நல்ல செயல்களில் ஈடுபட்டு இறைவனுக்கு, தொண்டு புரிதல் ஒன்றே நமக்கு தொழில் என்ற நினைவுடன் வாழ்ந்தால், நமக்கு வேண்டிய அனைத்தையும் பகவான் தருவார் என்ற நம்பிக்கையே சரணாகதியாகும். 


பகவானை சரணடைந்து வைகுண்ட ஏகாதசி விரதமிருந்து, பெருமான் நாமத்தை உச்சரித்து, பெருமாள் ஆலயத்தில் ‘சொர்க்கவாசல்’ வழியே வந்தால் பகவான் சொர்க்கத்திலும் இடம் தருவார் என்பதை நம்மாழ்வார் மோட்சம் மூலம் நாம் அறியலாம்.



‪#‎காஞ்சி‬ ‪#‎கரைக்கண்டேஸ்வரர்‬ ‪#‎கோயில்‬ ‪#‎ரங்கா‬ #ரங்கா‪#‎கோவிந்தா‬ 🙇

No comments:

Post a Comment